சட்டவிரோதமாக தலைமன்னாருக்கு வருகை தந்த ஐவர் கைது!

இந்தியாவிலிருந்து படகு மூலம் சட்ட விரோதமான முறையில் தலைமன்னாருக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் – ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து அவர்கள் நேற்று காலை கைதாகியுள்ளனர்.

குறித்த 5 பேரும் கடற்படையினரின் விசாரணைக்குப் பின்னர் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் மன்னார், தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

24 மற்றும் 38 வயதுகளுக்கு இடைப்பட்ட ஐந்து பேரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் அங்கு பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த 5 பேரும் சட்ட விரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவில் இருந்து தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த ஐந்து பேரும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.