சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டமை – 86 பேர் மீது நடவடிக்கை!

சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டு முதல் தனியார் வீடுகளைச் சட்டவிரோதமாகக் குறுகிய காலத்திற்கு வாடகைக்கு விட்டதன் தொடர்பில் மொத்தம் 64 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மேலும் 15 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மூன்று மாதங்களுக்குக் குறைவான காலத்திற்கு வீடுகளை வாடகைக்கு விட்டனர்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளை ஆறு மாதங்களுக்குக் குறைவான காலத்திற்கு வாடகைக்கு விட்டதன் தொடர்பில் ஏழு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கழகமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் ஜூலை 3ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளன.

உரிய அனுமதியின்றி குறுகிய காலத்திற்கு இவ்வாறு வாடகைக்கு விடுவது தவறு என்று அவை பொதுமக்களை எச்சரித்துள்ளன. தவறு செய்வோர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் கழகமும் ஆணையமும் கூறியுள்ளன.

தனியார் வீடுகளை வாடகைக்கு எடுப்போர் குறைந்தது மூன்று மாதங்களுக்கு அவற்றில் தங்கவேண்டும். வீவக வீடுகளில் குறைந்தது ஆறு மாதங்கள் தங்கவேண்டியது அவசியம்.

‘ஏர்பிஎன்பி’ தளத்தில் கூட்டுரிமை வீடுகளும் கழக வீடுகளும் குறுகிய கால வாடகைக்கு விளம்பரப்படுத்தப்படுவதாக சிஎன்ஏ ஜூன் மாதம் தகவல் வெளியிட்டிருந்தது. 

அவற்றில் சில, ‘சர்விஸ் அபார்ட்மெண்ட்’ எனும் பிரிவின்கீழ் வாடகைக்கு விடப்படுவதாக அது குறிப்பிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கழகமும் ஆணையமும் இவ்வாறு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

‘சர்விஸ் அபார்ட்மெண்ட்’ வீடுகளுக்குக் குறைந்தபட்ச தங்கும் காலம் ஏழு நாள்களாகும்.

கேலாங், காத்தோங், புக்கிட் தீமா போன்ற வட்டாரங்களில் 15க்கு மேற்பட்ட வீடுகள் ‘ஏர்பிஎன்பி’ தளத்தில் இடம்பெற்றதாக சிஎன்ஏ அறிக்கை கூறியது.

சட்டவிரோதமாகக் குறுகியகால வாடகைக்கு விடப்பட்ட சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் புகாரளித்தால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று ஆணையமும் கழகமும் கூறின.

முதல்முறை தவறு செய்த தனியார் வீட்டு உரிமையாளர்களுக்கு $5,000 வரையிலான அபராதமும் அடுத்தடுத்த முறை தவறு நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் $200,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

வீவக வீடுகளைச் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்ட குற்றத்திற்கு எழுத்து மூலமான எச்சரிக்கையுடன் $50,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம். மிக மோசமான குற்றத்திற்குக் கழகம் அந்த வீடுகளைக் கைப்பற்ற நேரிடலாம்.