புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் விற்பனைக்கு தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லீற்றர் நாட்டு சராயமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (05) மாலை இடம்பெற்ற குறித்த முற்றுகை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி கிராம அலுவலர் பகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கிராம அமைப்புக்கள் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில் தமது கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை இனம் கண்டு அவர்களை பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய புதுக்குடியிருப்பு திம்பிலி கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைவாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் , பொலிஸ் கொஸ்தாபல்களான ஜே.நிக்கலஸ் (91796) ,பி.விதுரன்( 96522), வி.கவிராஜ் (105152), அபயகோன் (80425) உள்ளிட்ட பொலிஸார், கிராம சேவையாளர் தமிழ் செல்வன், கிராம அபிவிருத்தி சங்கம், கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
அப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் உட்பட்ட குழுவினர் விற்பனைக்கு தயாரான நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லீற்றர் நாட்டு சராயமும் கைப்பற்றப்பட்டிருந்தது.
எனினும் சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
திம்பிலி கிராம மக்கள் மற்றும் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு எனவும், போதை பாவனையை ஒழிக்க முன்வந்திருந்தமை பாராட்டத்தக்கது என இதன்போது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார்.