“தற்போதைய ஆட்சிக்கு எதிரான சக்திகளே ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றன.
ஜெனிவா ஊடாக எம்மை முடக்கும் முயற்சி ஒருபோதும் கைகூடாது.” என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கூட விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது எனக் கூறியவர்கள் தான், பொருளாதார விவகாரம் தொடர்பிலும் ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கூட முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எமது அரசு ஜனநாயக ஆட்சி முறைமை பின்பற்றுகின்றது. அந்தவகையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
வரலாற்றில் என்றுமில்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்.
இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை சர்வதேசம் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதக பதில் கிடைத்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவும்.
எனவே, ஜெனிவா ஊடாக எம்மை முடக்கலாம் என்ற முயற்சி ஒருபோதும் கைகூடாது” என தெரிவித்துள்ளார்.