“எமது இருப்பை தக்க வைக்க நாம் தான் போராட வேண்டியிருக்கின்றது. எமது இந்தப் போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டு ஒவ்வொருவரும் கிளர்ந்தெழுந்து போராட வரவேண்டும்.”என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
சங்கானை பேருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,வெடுக்குநாறிமலை ஆலய இடித்தழிப்புக்கு எதிராக வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். இவ்வாறு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை மக்கள் மயப்படுத்தப்படும்.
இப்போது போராட்டங்களே அருகிச் செல்லும் நிலைமைதான் காணப்படுகின்றது. 2001ஆம் ஆண்டு பொங்குதமிழ் எழுச்சியே பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றார்கள். அது எப்படி பல்கலைக்கழக மாணவர்களால் சாத்தியமாக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும்.
வீடு வீடாகச் சென்று பொங்கு தமிழுக்கு மக்கள் ஆதரவை திரட்டியமையால் சாத்தியப்பட்டது. போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்படும் போது தான் அவை வெற்றியடைய முடியும். இதனை நாங்கள் செய்யத் தவறுகின்றோமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இன்று இந்த இடத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு நூற்றுக்கணக்கானவர்களே வந்திருக்கின்றார்கள்.
வட்டுக்கோட்டையில் பல்லாயிரம் இன உணர்வாளர்கள் இருந்தாலும் அவர்கள் வரவில்லை. மக்களுக்கு எங்களுடைய போராட்டங்களின் தார்ப்பரியங்களை எடுத்துச் சொல்வதனூடாகத்தான் அவர்களை அணிதிரட்ட முடியும்.
காலிமுகத்திடல் போராட்டத்தையும் குண்டர்களை கொண்டு அடித்துடைத்து ஒழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் போராட்டக்காரர்களின் பக்கம் நின்று அவர்களை வெற்றியடைச் செய்தார்கள். அந்தப் போராட்டம் மக்கள் மயப்பட்டமையாலேயே வெற்றி பெற்றது. நாங்கள் கடந்த பத்தாண்டு காலமாக அறவழியில் இவ்வாறு சிறு சிறு போராட்டங்களை நடத்துகின்றோம்.
இப்போதுகூட குருந்தூர் மலை, கன்னியா வெந்நீர் ஊற்று, வெடுக்குநாறி, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை, கச்சதீவு புத்தர் சிலை என எல்லாவற்றுக்கும் திட்டுத்திட்டாகப் போராட்டம் நடத்தியிருக்கின்றோம். அவை வெற்றியடைந்துள்ளனவா? நாம் காத்திரமான போராட்டத்தை தொடர் போராட்டமாக நடத்த வேண்டும்.
அடுத்த மாதம் எங்கள் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடைப்பிடிக்கவுள்ளோம். அதற்கும் இந்த ஆட்சியாளர்கள் தடைகளை ஏற்படுத்தலாம்.மக்கள் திரட்சியின் ஊடாகவே அதனை தகர்த்தெறிய முடியும்.
அன்று இனப்படுகொலை நடந்தது. இப்போது பண்பாட்டுப் படுகொலை, கலாசார படுகொலை நடந்து கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியே நாம் இனவழிப்பு இப்போதும் நடப்பதாகக் குறிப்பிட்டு இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம்.
எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில், தமிழினத்துக்கு விடிவு கிடைக்கும் வரையில் நாம் போராடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இந்த மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது. தமிழ் மக்களை ஒடுக்குவதற்காகத்தான் பயங்கரவாத தடைச் சட்டமே வந்தது. புதிய சட்டம் மிக ஆபத்தானது என்று சிங்களவர்களே சொல்லுகின்றனர்.
கருத்துச் சுதந்திரத்துக்கு பெரும் சவால் விடுக்கும் வகையில்தான் புதிய சட்டவரைவு இருக்கின்றது. ஊடகங்கள் மீது கிடுக்கிப்பிடி வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதற்கு எதிராகவும் நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கச்சதீவு தமிழ் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் ஒரு அடையாளமாக விளங்குகிறது. இவ்வாறான ஒரு நிலையில் கச்சதீவில் புத்தரை அமர வைத்துள்ள நிலையில் எமது வரலாறுகளை மாற்றி கச்சதீவை பௌத்தத்துடன் தொடர்புபட்ட பூமியாக மாற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
இவ்வாறான செயற்பாடுகளிடம் பெற்று வரும் நிலையில் இந்திய அரசானது இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்காமல் மௌனம் காப்பது கச்சதீவை பௌத்த பூமியாக ஏற்றுக் கொள்கிறதா? என்ற கேள்வி எமக்கு எழுகிறது.
தமிழ் மக்களின் நிலங்கள் தொல்லியல் என்ற போர்வையில் அவர்களின் வரலாற்று அடையாளங்களும் பூர்வீக நிலங்களும் அரசினால் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆகவே கச்சதீவையும் பௌத்த பூமியாக மாற்றுவதற்கு முன்னர் பாரத பிரதமர் நரேந்திர மோடி குறித்த விடயத்தில் தலையீடு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.