தரம் குறைந்த மின் கம்பிகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டில் தரம் குறைந்த மின் கம்பிகள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மின் கம்பிகள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.எல்.எஸ் அல்லது  இலங்கை தர நிர்ணய சபையின் சான்றிதழ் இல்லாத இந்த மின் கம்பிகளில் உற்பத்தி நிறுவனத்தின் பெயர் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பிரபல பண்டக்குறிகளுக்கு நிகரான பெயர்களைக் கொண்ட பெயர்களில் இவை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் கம்பிகள் செப்புக் கம்பிகளினால் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், இந்த தரம் குறைந்த மின் கம்பிகளை உற்பத்தி செய்ய அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த மின் கம்பிகளை பயன்படுத்துவதனால் மின்சார இயந்திரங்கள் பழுதடைவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெசாக், பொசோன் நிகழ்வுகளின் போது அலங்காரம் செய்வதற்கு இந்த மின் கம்பிகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புறக்கோட்டையிலிருந்து இந்த மின் கம்பிகள் நாடு முழுவதிலும் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தரம் குறைந்த இந்த மின் கம்பிகள் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாவிற்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போலியான தரம் குறைந்த மின் கம்பி உற்பத்திகள் சந்தையில் விற்பனை செய்வது குறித்து  இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது.