திரைப்பட நகைச்சுவை நடிகரான பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல யூடியூப் சேனலின் பிராங்க் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். அந்த பிரபலத்தினால் திரைப்படங்களில் நடிப்பதற்காக அவருக்கு சிறு சிறு வாய்ப்பு கிடைத்தது. அப்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ திரைப்படத்தில் தன் முதல் வாய்ப்பை பெற்றார் ரமேஷ்.
பின் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், அமலாபாலின் ஆடை, ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் பெற்றுவந்தார்.
இதற்கிடையில், அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம் இவருக்கு இருந்துள்ளது. இதை அவரேவும் ஒரு நேர்க்காணலில் தெரிவித்திருந்தார். மதுவின் விளைவாக அண்மை காலமாகவே பிஜிலி ரமேஷ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்துள்ளது. இதனால், தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இவரது சிகிச்சைக்காக பலர் இவருக்கு உதவியும் வந்துள்ளனர்.
ஆனால் தொடர் சிகிச்சைகள் பலனளிக்காததால், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று மாலை 5 மணி அளவில், எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.