பெற்ற மகளிற்கு ஓர் கடிதம்

மகளே நீ எப்படியிருக்கிறாய் ?

மாசமாய் இருக்கிறாய் என்று உன் மாமா சொன்னார்..நானும் உன் அம்மாவும் விரும்பித் தான் திருமணம் செய்தோம்
எங்களுக்குள் அன்பு குறையாததை நீ பாத்திருப்பாய்…உனை செல்லமாக வளர்த்து விட்டதால் விட்டுப் பிரிய மனமில்லை…

இருந்தும் விட்டுக்கொடுத்தேயாக வேண்டும்.
சின்னச் சின்ன விசயங்களுக்கே கோபப் படுவாய்.. சின்னக் காயத்துக்கும் அழுது தீர்ப்பாய்…

இடைவெளி இன்றிக் கதைத்துக்கொள்வாய் -சகோதரத்தோடு வேண்டும் என்றே சண்டையிடுவாய்…
தலையிடிக்கும் படுத்து விடுவாய்.. தந்திரமாய்க் கதைத்துக்கொள்வாய்…

உள்ளுக்குள் படபடப்பு.. எப்படி இருப்பாயோ என்ற ஏக்கம்.. பழைய நினைவுகளோடு அடிக்கடி சிரித்துக் கொள்வோம்….
எப்போதும் எம்மை யாரிடமும் விட்டுக்கொடுத்ததில்லை நீ…
என் செல்லப் பெண்ணே

எம்மோடு எப்படியிருந்தாயோ அப்படியே இரு…
ஆனாலும் அந்தக் கோபத்தையும் ஈகோவையும் விட்டுக்கொடுத்து விடு…
என் செல்ல மகளே எம்மோடு எப்படியிருந்தாயோ அப்படியே இரு..
அந்த சோம்பேறித்தனத்தையும் சண்டையிடுவதையும்
மட்டும் நிறுத்தி விடு….

என் செல்ல இளவரசியே இப்போது
நீ அந்த வீட்டு அரசி..
உன் மாமனும் மாமியும் உனக்கின்னொரு பெற்றார்..
எதிர்த்து கதைக்காதே
எதையும் சமாளிக்கக் கற்றுக்கொள்…
எதிர்பார்த்து
நிற்காதே.. எப்போதும் தைரியமாக
செயற்படு..

சிரத்தையான வேலையானாலும் சினமின்றி செய்து பார்..
சின்னச் சின்னக் கஸ்ரங்களை தூக்கியெறிந்து வாழ்…
அன்போடு குடும்பம் நடத்து..
ஆசைகளை அளந்து போடு..

சின்னச் சின்ன பணிவிடை செய்
சுட்டித்தனத்தை கணவனிடம் வெளிப்படுத்து..
இனி இன்னொரு குழந்தைக்கு அம்மா நீ..
பொறுப்போடு நட..
போதியளவு நீர் குடி..
போசாக்கான உணவு உண்…
எப்போதும் கற்றுக் கொள்..
பண்பாடோடு நடந்து கொள்…
அன்புக்காய் அடம்பிடி..
ஆணவத்தை கை விடு…
யாரையும் புண்படுத்தாதே..
யாவையும் தெரிந்து கொள்..
அன்போடு குடும்பம் நடத்து..
ஆசைகளை அளந்து போடு…
ஊரான் சொல் கேக்காதே..
உண்மை அறிந்து நட…

எல்லா உறவுமாய் வந்தவனை ஒரு போதும்
உதறாதே…

கண்களாக அரவணைத்து வம்சம் துளிர்க வாழ்…
எம் செல்ல மகள் நீ..
எப்போதாவது வந்து செல்..
இந்த அப்பன் ஆத்தை உனக்காக காத்து நிப்பர்…
இப்படிக்கு அப்பா…

முல்லைக்கவி தனுஜா