பொருளாதாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் கற்பிக்க வேண்டும்!

21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரம் என்ன என்பதை புரிய வைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான www.publiclearn.lk/ என்ற இனையத்தளத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இன்று நாம் அறிவு நிறைந்த சமூகத்தில் வாழ்கிறோம்.

அந்தச் சமூகத்தில் போட்டித்தன்மையுடன் முன்னேறுவது அவசியம்.

கல்வியில் நாம் முன்னணி நாடாக இருப்பதனால், இது கடினமான காரியம் அல்ல என்று நான் நம்புகிறேன்.

தற்போது கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த புதிய திட்டம் அதற்கு நல்ல பங்களிப்பை வழங்கும்.

எவ்வாறாயினும், ஒரு புதிய பொருளாதார மாற்றத்திற்கான நமது அணுகுமுறையில் மாற்றம் தேவை.

நிச்சயமாக நம்மால் அதனை சாதிக்க முடியும். எதிர்காலத்தில் வகுப்பறைகள் மற்றும் சுவர்கள் இன்றி பாடசாலைக்கு வெளியிலான கற்றல் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறான திட்டமே இன்று தொடங்குகிறது.

21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரம் என்ன என்பதை நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இதனை புரிய வைப்பதற்கு அவர்களுக்கும் சில வகுப்புகளை நடத்தவேண்டும்.” என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார்.