போலி வேடத்தில் கனடா வாசியிடம் மோசடி : யாழ் இளைஞன் கைது!

போலி ஆவணங்களை உருவாக்கிக் காண்பித்து மருத்துவர் என அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடி 42 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர். 

அதிசொகுசு கார் ஒன்றும், 15 பவுண் நகைகளும், 5 இலட்சம் ரூபா பணமும், 5 கைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் தான் ஒரு மருத்துவர் என்பதற்குரிய போலி ஆவணங்களையும், அடையாள அட்டையையும் உருவாக்கியுள்ளார். அவற்றைக் கொண்டே அவர் மோசடிகளை மேற்கொண்டுள்ளார்.

கனடாவில் உள்ள ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ள இவர், மருத்துவ மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்துள்ளது என்றும், அதனால் வெளிநாடு செல்லவுள்ளேன் என்றும் பொய் சொல்லியுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் காணி ஒன்று தனக்கு உள்ளது என்று தெரிவித்து அதற்குரிய ஆவணங்களையும் அனுப்பியதுடன், அதை ஒரு கோடி 42 இலட்சத்துக்கு விலைபேசியிருக்கின்றார். அதை நம்பி கனடாவில் இருந்து உண்டியல் மூலமும், வங்கிக் கணக்கு ஊடாகவும் ஒரு கோடி 42 இலட்சம் ரூபா கைமாறியுள்ளது.

பின்னர் இவர் அனுப்பிய காணி ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்துகொண்ட கனடா தரப்பு இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது.

விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நடமாடுவதை அறிந்துகொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் சந்தேநபரைக் கைது செய்தனர்.

சந்தேகநபர் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான அதிசொகுசு காருடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் இருந்து கைச்செலவுக்காக வைத்திருந்த ஐந்து இலட்சம் ரூபா பணமும், அவர் அணிய வைத்திருந்த 15 பவுண் நகைகளும், 5 கைபேசிகளும், வங்கி அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் தன்னை மருத்துவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்று பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. 

ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை மேற்கொள்கின்றேன் என்று தெரிவித்து வெளிநாடுகளில் உள்ள பலரிடம் பணம் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

சந்தேகநபரால் பலகோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்றும், விசாரணைகளில் மேலதிக விடயங்கள் வெளிவரலாம் என்றும் நம்பப்படுகின்றது.