“ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!” என்பது திருமணங்களின்போது பெரியவர்களால் வழங்கப்படும் ஆசி.
ஏனெனில் அறுகானது ஓரிடத்தில் முளைத்து விட்டால் அதனை அழித்தாலும் மீண்டும் முளைக்கும் விசேட குணமுடையது.
இதனை மருத்துவத்தில் பயன்படுத்தினால் சிறந்த குணங்களை பெறலாம்.
தீரும் நோய்கள்-
திரிதோடம், சளி, கண்ணோய், கண்புகைச்சல், இரத்தபித்தம்,தலைநோய் மருந்துகளின் வெப்பம் ஆகிய இவைகளைப் போக்கும்.
பயன்படுத்தும் முறைகள்-
அறுகம்புல்லின் சீத ஊறல் குடிநீருடன் பாலுஞ்சேர்த்து உட்கொள்ள, மூலரத்தம், நீரடைப்பு, சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றைக் கண்ணுக்குப் பிழிய கண் ணோய், கண்புகைச்சலும், மூக்கிலிட இரத்த பீநசமும், காயப்பட்ட இடத்தில் பூச இரத்தம் வடிதலும் நிற்கும்.
புண்களின் மீது தடவ, புண் ஆறிவரும். வெள்ளிக்கிழமையில் குடித்துவர, பெருச்சாளி விடம் நீங்கும்.
அறுகம்புல்லுடன், சிறிது மஞ்சள் சேர்த்தரைத்துத் தடவி வர, சொறி சிரங்கு, படர்தாமரை, கிருமிரோகம், சீதபித்தம் நீங்கும்.
அறுகம்புல், கடுக்காய்த்தோல், இந்துப்பு, கிரந்தி, கஞ்சாங்கோரை இவை சமனெடை எடுத்து, மோர்விட்டரைத்துப் பூச சொறி சிரங்கு, படர் தாமரை அழியும். கிருமிசாகும்.
அறுகங்கட்டைத் தைலத்தினால் கரப்பான், சொறி, சிரங்கு நீங்குவதோடு அதில் ஏற்படும் எரிவும் நீங்கும்.
செய்முறை :-
அறுகம்புல் சாறு 100g, தேங்காய் எண்ணெய் 100g, அதிமதுரம் 5g மூன்றையும் ஒன்றாக கலந்து அடுப்பேற்றி எரித்து கரகரப்பு பக்குவத்தில் அடுப்பிலிருந்து எடுக்க வேண்டும்.
அறுகம்வேர்
அறுகின் கிழங்கால், தணியாத பற்பல வெப்பமும் திரிதோட ரோகங்களும் நீங்கும். உடல் அழகு பெறும்.
இதைக்கணு நீக்கி, 10g எடுத்து, அத்துடன் வெண் மிளகு பத்து சேர்த்துக் கஷாயமிட்டு வடித்து அதில் 5g பசுவின் வெண்ணெய் கூட்டி உட்கொள்ள, மருந்தின்வேகம், இரசவேக்காடு, மூலக் கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு (கல்), வெட்டை, மூத்திரதாரை எரிச்சல் முதலானவைகள் நீங்கும்.
தயிரில் அரைத்துக் கலந்து கொடுக்க, தந்திப்பிரமேகம் நீங்கும்.
-சூர்யநிலா –