மழை நாளை கொண்டாட சந்தர்ப்பம் கிடைப்பதில்லை…

கவிதை

மழை நாளை கொண்டாட வேண்டும் என்பது எல்லோரும் விரும்புவது ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை…

நீண்டதொரு ஒற்றையடிப் பாதை
இரண்டு பக்க மரமும் செடியும் கொடியும் ஒன்றோடொன்று கை கோர்த்தவையாக

அவற்றின் நடுவே குடை தவிர்த்து பாதம் பதித்து
இலைகளின் மேலுள்ள துளிகள்
ஆங்காங்கே தேகங்களில்
கொட்டிக்கொள்ள முழுவதுமாய் நனைந்தபடி எப்போதோ யாரோ எழுதிய அந்த காதல் கதையை கவிதயாய் கட்டுரையாய் நாவலாய் மீட்ட படி கைகளை தளர்த்தி இலைகளின் வாசனையை பற்றியபடி

அண்ணாந்து அந்த கருமேகத்தையும் இரசித்தபடி
மெல்ல மெல்ல நகர்ந்த பொழுதுகளில்
வானம் கொஞ்சம் கொஞ்சமாக மழையை நிறுத்திக் கொண்டது.

மழைக்குப் பின்னான மேகத்தையும் வானத்தையும் சொற்களுக்குள் வர்ணித்து விட முடியாது
மரங்களின் புது மலர்ச்சி
கண்ணைக் கவரும் இயற்கை அது
பட்சிகளின் ஓசை
அத்தனை கருவிகளின்
ஓசையையும் அணைத்துவிடும்
அந்த வானம்
அந்த பூமி
அந்த பச்சை
அந்த செழுமை
அந்த இயற்கை
இவற்றை மீட்டிக் கொள்ள நினைத்தால்
புகைப்படமாக்கிக் கொள்
எப்போது பார்த்தாலும்
அந்த நாளின் மீதான ஈர்ப்பு தீராது.

  • தே.நிலா –