யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு அதிலிருந்து 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலர்களினால் இன்று (02.04.2023) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையிலே இச்சம்பவம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் உள்ள கிருஸ்தவ சபையொன்றினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலகர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் உரியவகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் நாய்களுடன் விளையாட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்தப்பட்டு விற்றமின் சி மற்றும் டி மாத்திரைகள் தேவையின்றி வழங்கப்பட்டுள்ளன.
இதன் போது சிறுவர்கள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் தம்மை வேறு சிறுவர் இல்லங்களில் சேர்க்குமாறு கோரியுள்ளனர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது சிறுவர்கள் மருத்துவ அறிக்கைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.
சிறுவர்கள் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.