யாழில் சீரற்ற காலநிலையால் 7 குடும்பங்கள் பாதிப்பு

தொடரும் சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/125 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஜே/191 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/33 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.ஜே/26 மற்றும் ஜே/21 ஆகிய பகுதிகளில் இரண்டு அடிப்படை கட்டமைப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே/232 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே/66 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே/263 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.கொக்குவில் மேற்கு பகுதியில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வீட்டிற்கு மேல் பனைமரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் 19.7 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன், இன்று வெள்ளிக்கிழமை (24) கடல் கொந்தளிப்பாக இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறியுள்ளதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நெடுந்தீவு யாழ்ப்பாண கடற்போக்குவரத்து இடம் பெறமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.