யாழ்ப்பாணத்தில் தீபாவளி தினமான நேற்றிரவு இளைஞர்களின் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ். வடமராட்சி – புலோலி, சிங்கநகர் பகுதியில் நேற்றைய தினம் (24.10.2022) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இளைஞர்கள் சிலர் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, அதில் ஒருவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
அவரைக் காப்பாற்ற மற்றுமொரு இளைஞரும் கிணற்றுக்குள் குதித்த நிலையில் இருவரும் கிணற்றுத் தண்ணீருக்குள் தத்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அயல்வர்கள் குறித்த இரு இளைஞர்களையும் கிணற்றில் இருந்து மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் வைத்தியசாலைக்கு வரும் முன்பே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதான சுசேந்தகுமார் சசிகாந் மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கணேசலிங்கம் லம்போசிகன் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.