யாழ்ப்பாணம் – நெடுந்தீவு மேற்கு பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டை பாகங்களை பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கோட்டையின் வரலாற்றை தெளிவுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவலி இறங்கு துறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் குறித்த புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பர பலகைகள் முளைத்துள்ளன.
குறித்த விளம்பரத்தில் பல்வேறு தொல்பொருள் கலைப் பொருட்கள் நெடுந்தீவில் உள்ளன மற்றும் பழங்கால மதிப்புள்ள மூன்று ஸ்தூபிகள் இங்கு காணப்படுகின்றன. இந்த ஸ்தூபிகள் ஒவ்வொரு அளவுகளில் உள்ளன.
மிகப்பெரிய ஸ்தூபியின் கல்லறைகளில் 3 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பெரிய ஸ்தூபியின் விட்டம் 13.54 மீட்டர். அதன் சுற்றளவு 31.93 மீட்டர். கல்வெட்டுகளில் ஒன்று பிராமிய எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. பிராமி கல்வெட்டு கி.பி 1 – 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் சிங்கள பிராகிருதத்தில் எழுதப்பட்டது என்றும், கல்வெட்டு நிபுணர்கள் நம்புகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விளம்பர பலகையில் பௌத்த இடிபாடுகளைக் கொண்ட இந்தத் தளம் நெடுந்தீவின் புராதன பௌத்த தளம். இது கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பெரிய ஸ்தூபி பவளக்கல்லால் ஆனது. ஏனைய இரு ஸ்தூபிகளும் கிழக்கு மேற்காக அமைந்துள்ளன எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த புராதன தளமானது வெடிகரசன் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது எனவும், இவை குறித்த வரலாறு வரலாற்று பதிவுகள் பல்வேறு புராதன தமிழ் ஆவணங்களில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், குறித்த நடவடிக்கை திட்டமிட்ட வகையில் தமிழர் வரலாற்றை திரிவுபடுத்தும் பௌத்த ஆக்கிரமிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.
விளம்பரப்படுத்தலுக்கான பிரதேச சபை அனுமதி பெறப்பட்டதா? விளம்பரப் பலகைகள் நாட்டப்பட்டமை குறித்து உரிய அதிகாரிகள் இதுவரை கவனம் செலுத்தாது இருப்பது ஏன்? எனவும் நெடுந்தீவு மக்கள் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறித்த செயற்பாடு தொடர்பில் வடக்கில் உள்ள வரலாற்று பேராசிரியர்கள், பல்கலைக்கழக சமூகம், புத்திஜீவிகள் விரைந்து தடுத்து நிறுத்த முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.