யாழ்ப்பாண பொதுநூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு, வன்முறைக் குழுவொன்றினால் நூலகம் தீயூட்டப்பட்டது.
யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.
அதன்போது அங்கிருந்த பல பாரம்பரிய நூல்கள் தீயினால் அழிவடைந்தன.
யாழ்ப்பாண நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது.
முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் மக்களின் ஆதரவுடன் அது வளர்ச்சியடைந்தது.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பழமையான பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
1981 ஆம் ஆண்டு தீயூட்டி எரிக்கப்பட்டதன் பின்னர், 2004ஆம் ஆண்டில் நூலகம் புனரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்பட்டது.
தற்போது யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் 125,000 நூல்கள் உள்ளதாக நூலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016ஆம் ஆண்டு நூலகம் கணினிமயப்படுத்தப்பட்ட பின்னர், பதிவுசெய்யப்பட்ட வாசகர்களின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளது.
நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்று காலை யாழ்ப்பாண நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற உள்ளதாக மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.