லெபனானில் பதற்றம்: 32 இலங்கையர்கள் தூதரகத்தில் தஞ்சம்

லெபனானில் நிலவும் பதற்றம் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனானில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தூதரகம் அப்பகுதியில் உள்ள இலங்கையர்களுடன் தொடர் தொடர்பைப் பேணி வருகிறது.

இஸ்ரேல் – லெபனான் மோதல் காரணமாக இலங்கை பிரஜைகள் எவரும் பாதகமான விளைவுகளை இதுவரை எதிர்கொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சு மேலும் உறுதியளித்துள்ளது.

இதேவேளை, இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமானங்கள் வழமையாக இயங்க ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் இரண்டு நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த துபாய் மற்றும் அபுதாபியிலிருந்து இஸ்ரேலுக்கான விமானங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இஸ்ரேலுக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் அவர்களின் விமானங்களின் நிலை குறித்து தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாக 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட சுமார் 2,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஹிஸ்புல்லாவின் பிற தகவல் தொடர்பு வசதிகளை இலக்குவைத்து இஸ்ரேலின் ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதல்களால் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.