வவுனியாவில் நால்வர் உயிரிழப்பு விவகாரம் ; நடந்தது என்ன

சென்ற வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை விடுமுறை நாள். எல்லோரும் உறவுகளுடன் தமது விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை வழமை போன்று அமைதியாகவே விடிந்தது.

ஆனால் அந்த அமைதியை சீர்குலைக்கும் வகையில் எல்லோர் மனங்களிலும் சோகத்தை ஏற்படுத்திய துயரச் சம்பவமே வவுனியாவில் கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம்.

இது வவுனியாவை மட்டுமன்றி முழு இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? என்பதற்கு அப்பால் இதற்கான காரணம் என்ன என்பதற்கான தேடல்களே அனைவரிடமும் தொடர்கிறது.

வவுனியா, குட்செட் வீதி, அம்மாபகவான் வீதியில் உள்ள தமது வீட்டில் ஒரு அழகிய சின்னக் குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத் தலைவன் மண் மேல் பற்றுக் கொண்டவனாகவும், கிரிக்கெட் விளையாட்டில் தனியிடம் பிடித்தவனுமாகிய சிவபாலசுந்தரம் கொளசிகன் (வயது 42). அவன் கிரிக்கெட்டில் மட்டுமன்றி தன் குடும்பத்திடமும் அளவு கடந்த பாசம் கொண்டிருந்தான்.

தனது 9 மற்றும் 3 வயது பிள்ளைகளின் பெயர்களை தனது கையில் பச்சையும் குத்தி வைத்திருந்தான். அன்பான மனைவி (வயது 36) வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியர். கணவன், மனைவி இரண்டு அழகிய பெண் பிள்ளைகள் என அவர்களது வாழ்க்கை வசந்தமாய் போனது.

……………சம்பவம் கண்டறியப்பட்ட விதம்……….

கௌசிகனின் நண்பர் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை கௌசிகனின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார் ஆனால் பதில் கிடைக்கவில்லை. கௌசிகனின் வாட்சப் அதிகாலை வரை இயங்கு நிலையில் இருந்துள்ளது. தொடர்ந்தும் அழைப்பு எடுத்து பதில் கிடைக்காமையால் கௌசிகனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கே பெரும் அதிர்ச்சியே மிஞ்சியது. வீட்டு வாசலில் நின்று பலமுறை அழைத்தும் வீட்டுக்குள் இருந்து எந்த பதிலும் வரவில்லை. யார் அழைத்தாலும் ஓடிவரும் பிஞ்சுப் பாதங்கள் நடமாடிய அந்த வீடும் வளவும் அமைதியாகவே உறங்கிக் கொண்டிருந்தது.

இதனையடுத்து குறித்த நண்பர் கதவை திறந்து பார்த்த போது அந்த குடும்பமே சடலங்களாக காணப்பட்டுள்ளனர். கௌசிகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகவும் அவரது மனைவி கட்டிலில் மரணமடைந்த நிலையிலும், இரண்டு பிள்ளைகளும் ஒவ்வொரு கதிரைகளில் மரணமடைந்த நிலையிலும் காணப்பட்டனர்.

அவர்களது உடல் போர்வை ஒன்றினால் கழுத்துவரை மூடப்பட்டிருந்ததுடன், நால்வரது நெற்றியிலும் வீபூதியும் பூசப்பட்டிருந்தன.

அதிர்ச்சியடைந்த நண்பன் வவுனியா பொலிஸாருக்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

கொலையா தற்கொலையா என்ற இருவேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் பலரது வாக்கு மூலங்களையும் பதிவு செய்திருந்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

…………சம்பவம் தொடர்பான அயலவர்களின் கருத்து……….

காலம் செல்ல செல்ல வந்த பழக்கங்களால் புதிய வியாபாரங்கள் செய்யும் மனிதர்களும் கௌசிகனுடன் நட்பானார்கள். அதனால் கௌசிகனும் புதிய வியாபார முயற்சிகளிலும் இறங்கியிருந்தார். அதன் காரணமாக தனது நண்பர்களிடம் கடன்களையும் பெற்றிருந்தார்.

வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பால் கடன் சுமை இருந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வீட்டில் அவ்வப்போது சலசலப்புக்களும் இடம்பெற்றன. இன்று சண்டை இல்லாத வீடு தான் ஏது. ஆனால் அது விபரித முடிவு எடுக்கும் அளவுக்கு செல்லவில்லை.

அவரது வாகனம் ஒன்று இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னரே ஒருவர் பெற்றுள்ளார். அது கொடுத்த காசுக்காக பெறப்பட்டதாக ஊர் மக்கள் பேசுகின்றனர்.

அழகிய குடும்பத்தில் கடன் பிரச்சினைகள் அவ்வப்போது குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுகளையும், ஊடல்களையும ஏற்படுத்தி இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை கடந்த புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் வெளியாகவில்லை.

ஆனால் அவர்கள் நஞ்சு அருந்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் புதன்கிழமை இரவு அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் அவர்களது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.

பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு தமது கண்ணீர் காணிக்கைகளை செலுத்தியதுடன், வவுனியா மாவட்டமே சோகத்தில் மூழ்கியது.

அதன்பின்னர் வைரவபுளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைத்தானத்தில் கௌசிகனின் உடலும், குறித்த ஆசிரியர் கற்பித்த பாடசாலையில் அவரது உடலும் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் பின் வெளிக்குளம் இந்து மாயானத்தில் நால்வரும் அடக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? என்பது தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே கூறமுடியும் என்கின்றனர் வவுனியா பொலிஸார்.

இறப்புக்கான காரணம் என்ன தான் இருந்தாலும் குடும்பம் என்னும் போது நாம் நகரும் ஒவ்வொரு நொடிகளையும் சிந்தித்தே நகர்த்த வேண்டும். பச்சிளம் குழந்தைகள் இந்த மண்ணின் வாசனையை அறியாமலேயே மண்ணுக்குள் போனமையை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த அழகிய குடும்ப கூடு சிதைந்தமைக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும்.

கொலை எனில் அதற்கு நீதி கிடைக்க வேண்டும்.தற்கொலை முடிவு எனில் அந்த தவறான முடிவை எடுக்க தூண்டியவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

மனிதனிடம் மனிதநேயம் இருக்க வேண்டும். மற்றவர்களின் கருத்தை கேட்கின்ற, மதிக்கின்ற, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுப்பு, பொறுமை என்பன இருக்க வேண்டும்.

அதன் மூலமே மனிதன் மனிதனாக வாழ முடியும். அத்தகைய பண்புகளை வளர்த்துக் கொண்டால் தவறான முடிவுகள் எடுக்க எவரும் தூண்டப்பட மாட்டார்கள்.

கோபத்தால் தவறுகளையும் செய்ய மாட்டார்கள். இன்னொருவரை கொலை செய்யும் அளவுக்கு எவரும் செல்ல மாட்டார்கள்.

மனிதனாக படைக்கப்பட்டது வாழ்க்கை வாழ்வதற்கே. அதனை அனைவரும் புரிந்து கொள்வதன் மூலமே தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்பதே உண்மை.