விசேட சுற்றிவளைப்பு : 24 மணித்தியாலத்தில் 1,676 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,676 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்ட 45 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 112 சந்தேகநபர்கள் புனர்வாழ்வு  மத்திய நிலையங்களுக்கு அனுப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், 119 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஏற்கனவே சந்தேக நபர்களாக பட்டியலிடப்பட்ட 169 நபர்கள் இவர்களுள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த விசேட நடவடிக்கையின் போது ஒரு கிலோ 692 கிராம் ஹெராயின், 393 கிராம் ஐஸ், 42.1 கிலோ கிராம் கஞ்சா, 235,680 கஞ்சா செடிகள், 20,615 போதை மாத்திரைகள்,  11 கிலோ கிராம் மாவா மற்றும் 534 கிராம் ஹேஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்புக்களில் இதுவரை 11,500  பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.