இந்தியாவில் உள்ள சகல விமான நிலையங்களிலும் தங்கக் கடத்தல் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு இந்தியாவின் சகல வருவாய் புலனாய்வு பணியகம் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தங்கக் கடத்தலுடன் சென்னை விமான நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தொடர்புபட்டுள்ளமை அண்மையில் கண்டறியப்பட்டது.
தீர்வையற்ற வர்த்தக நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலைய ஒப்பந்த ஊழியர்களிடம் இலங்கை இடைமாறல் பயணிகள் தங்கத்தை ஒப்படைப்பதாகத் தெரியவந்துள்ளது. இச்செயற்பாடு சிசிடிவி கெமராக்களுக்குள் சிக்காத வகையில் கழிவறைகளில் இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.
குறைவான சுங்க அதிகாரிகள் உள்ள முனையம் ஊடாக குறித்த தங்கம் வெளியில் எடுத்துச் செல்லப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, விமான நிலையத்தில் உள்ள பல்வேறு ஒப்பந்த பணியாளர்கள், விமான நிறுவன ஊழியர்கள் மற்றும் விமான நிலைய வர்த்தக நிலையங்கள் செயல்படும் முறைமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் 1.4 கிலோகிராம் தங்கத்தைக் கடத்த முயன்றதற்காக விமான நிலைய சுகாதார அதிகாரி ஒருவரும் அபுதாபியிலிருந்து வந்த பயணி ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் கழிவறையினுள் தங்கத்தைக் கைமாற்றியுள்ளதாகவும் பலமுறை இவ்வாறு தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தநிலையில் சென்னையில் பல விமான நிலைய ஊழியர்கள் தங்கக் கடத்தலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டதால், இந்திய விமான போக்குவரத்து ஆணைக்குழு, விமான நிலைய கழிவறைகளின் பயன்பாடு தொடர்பில் மட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.