வெடிகுண்டை விடவும் பண்பாடு பலம் வாய்ந்த ஆயுதம்!

ஒரு இனத்தின் பண்பாடு, பாரம்பரியம், பூர்வீகம், வரலாறு என்பது அந்த இனத்தின் தனித்துவ அடையாளங்களாகவும், அவர்களின் தடையங்களாகவும் உள்ளன.

இலங்கையை பொறுத்தவரை ஈழத்தில் தொன்மை வாய்ந்த ஓர் இனமாக தமிழினம் உள்ளது. அவர்களுக்கான பூர்வீக நிலம் உள்ளது, அவர்களை ஆட்சி செய்த தமிழ் மன்னர்களின் உண்மை வரலாறுகள் பல உள்ளன.

ஆனால் தமிழினத்தின் வரலாறுகளை திரிபு படுத்தும் விதமாக இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வழமையாகவே இனவாதம் பேசுகின்ற சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஆகஸ்ட் 11 ம் திகதி இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இராமாயணம் இரண்டு, மூன்று விதமாக எழுதப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகிறது. அது வெறும் கற்பனை கதை என்றும் விமர்சிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது நாம் ஏன் இராவணன் சிங்களவனா அல்லது தமிழனா அல்லது கிறிஸ்தவனா? அல்லது முஸ்லிமா? என்று விவாதம் செய்ய வேண்டும்? ஒரு கற்பனை கதைக்கு எப்படியும் வடிவம் கொடுக்கலாம்.

அவர் சிங்களவராகவே இருந்துட்டு போகட்டும் அல்லது தமிழராகவே இருந்துட்டு போகட்டும் அல்லது அரக்கர் வம்சத்தவராகவே இருந்துட்டு போகட்டுமே? இலங்கையில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றது.

அவற்றை விடுத்து இதுவா இப்பொழுது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விடயம்? என சிலர் கேள்விகளை முன்வைப்பதையும் காணலாம்.

நாம் எப்படித்தான் குத்தி முறிந்தாலும் வட இந்தியர்கள் தெற்கில் உள்ளவர்களை இராவணன் உட்பட எல்லோரையும் அரக்கர்கள் என்று எழுதி முத்திரை குத்தி வைத்து விட்டார்கள்.

யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் யாரும் குரைத்து விட்டு போகட்டும். நாங்கள் அமைதியாக இருப்போம் என்பதும் சிலரின் வாதம். இராவணன் ஒரு சிவபக்தன் சைவ சமயத்தான் மொழியில் தமிழர்.

இராவணன் சிங்களவர் என்றால் சிவபக்தனாக இருந்திருக்கமுடியாது. இராவணனின் மகன் பெயர் மேகநாதன் (இந்திரஜித்) இலங்கையில் எங்கயாவது ஒரு சிங்களருக்கு மேகநாதன் என்று பெயருன்டா? கூக்குரல் இடும் சரத்வீரசேகர உதயன் கம்பன்பில போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரலாற்று தெளிவின்மை போதாது என்று பார்த்தால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவசரப்பட்டு வரலாறுகளை மாற்றி கூறுவதையும் அவதானிக்கமுடிந்தது.

இனவாதம் பேசும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுமென தமிழர்களின் வரலாற்றை மாற்றி பொய் உரைப்பதும் ஒரு இனப்படுகொலைதான் என்பதை முதலில் எல்லோரும் புரிந்து கொள்ளல் வேண்டும்.

1956,ல் இருந்து 2009, மே,18, வரை சிங்கள இராணுவத்தாலும், அவர்களுடன் இணைந்து மேற்கொண்ட முஸ்லிம் ஊர்காவல் படையினராலும், இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். உயிர்களை அழிப்பது மட்டும் இனப்படுகொலை ஆகாது. அவர்களின் வரலாற்று தடயங்களையும், பண்பாடுகளையும் அழிப்பதும்(மாற்றுவதும்) ஒரு இனப்படுகொலைதான்.

அந்த வகையில் இனவாத சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இவ்வாறு இனத்துவேசமாக பேசிகிறார்கள் என பார்த்தால் உலமா கட்சி தலைவர் முஸ்லிம் இனவாதி மௌலவி முபாறக் அப்துல் மஜீத்தும் புதுக்கதையாக இராவணன் முஸ்லிம் மன்னன் என வரலாற்றை திரிபு படுத்துகிறார்.

கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவனே இராவணன் மரிய இராவணன் என்பதே அவனின் பெயர் என அருட்தந்தை பெனடிற் கூறினார் என்றும் ஒரு செய்தி வந்தது.

அடுத்தடுத்த வருடங்களில் சீனர்களும் இராவணன் சீனாவில் இருந்துதான் இலங்கைக்கு வந்தான் என கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இராவணன் யாராக இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும் முதலில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் எல்லாம் தமிழர்களாக உள்ளனரா என்பதையும் சிந்திப்பது நல்லது. சலுகைகளுக்காக சோரம்போன தமிழர்களும் எம் மத்தியில் பலர் உண்டு. சிங்கள இனவாதிகளைப் போன்று இன்னும் பலர் தமிழர்களின் பூர்வீக வரலாற்றை மாற்றி பிரசாரங்களை மேற்கொண்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

தமிழ் மன்னனான இராவணனைச் சிங்கள மன்னன் என்று சிங்கள பௌத்த இனவாதிகள் கூறுகின்றமை தமிழர்களின் வரலாற்றைத் திரிபுபடுத்துகின்ற தமிழர்களின் வரலாற்றை அழிக்கின்ற செயற்பாடாகும். தமிழின வரலாற்றை சிங்கள இனவாதிகள் மாற்றுவதும் ஒருவகையில் இனப்படுகொலைதான்.

வெடிகுண்டை விடவும் பண்பாடு பலமானது ஓர் இனத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதே. எந்தொரு ஆதிக்க சக்தியினதும், கோட்பாடாகவும் நடைமுறையாகவும் உள்ளன என கறுப்பின சிந்தனையாளர் அமில்கா கேப்ராயல் “வெடிகுண்டைவிடவும் பண்பாடு பலம்வாய்ந்த ஆயுதம்” என கூறியுள்ளார்.

இவ்வாறான சிந்தனையில் இப்போது தமிழ் இனத்தின் பண்பாடு வரலாறுகளை மாற்றும் பிரசார தாக்குதல்களும் திட்டமிட்டு ஶ்ரீ லங்காவில் சிங்கள இனவாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரப்புரைகளை முளைத்துள்ளன.

அதில் ஒன்றுதான் இராவணன் தமிழர் அல்ல அவர் சிங்களவர் என சர்ச்சையை நாடாளுமன்றத்தில் சரத்வீரசேகர கடந்த வாரம் முன்வைத்த கருத்தையும் பார்க்கலாம். ஓர் இனத்தை ஆயுதம் கொண்டு அழிப்பது என்பது வெறுமனே மனிதப் படுகொலை மட்டுமல்ல கூடவே அது ஒரு பண்பாட்டு அழிப்புமாகும். அவ்வாறு ஓர் இனத்தை அழிப்பதும் பண்பாட்டு அழிப்புத்தான்.

அதேவேளை அந்த இனத்தின் பண்பாட்டை இன்னொரு பண்பாட்டு பரவலால் விழுங்கி கபளீகரம் செய்வதும் பண்பாட்டு அழிப்புத்தான். இந்த வகையில் இராணுவ ரீதியில் அழிவுக்கு உள்ளாகி எமது மக்கள் மீது இனப்படுகொலை செய்தவர்கள் இப்போது தமிழின வரலாற்றை மாற்றுவதும் ஒருவகையில் இனப்படுகொலைதான் என்பதை தெளிவாக தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறானவர்களுக்கு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்தேசிய தலைவரகள் இவ்வாறான சிங்கள இனவாதிகளுக்கு தக்க பதில் கொடுக்கவேண்டும் என்பதற்காக யாழ் மாவட்ட இலங்கை தமிழ் அரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடந்த வாரம் இராவணன் தொடர்பான சில வரலாற்று தகவல்களை வழங்கியிருந்தார்.

அதில் சில தவறுகள் இருந்தாலும் ஒரு எதிர்பு அவர் மூலமாக காட்டப்பட்டது என்பது உண்மை. பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரரைகளும் புத்தர் சிலைகளும் வைப்பது போலவே தமிழினத்தின் தொன்மை வரலாறுகளை மாற்றும் சதியும் அரங்கேறுகிறது இதை அனுமதிக்க முடியாது.

இராவணன் தொடர்பான வரலாற்றை திரிபு படுத்தும் இனவாத கருத்துகள் ஒருபுறம் அரங்கேறியுள்ள நிலையில் அடுத்த தெரு சண்டியனான மேர்வின் சில்வா விகாரைகள்மீது கைவைத்தால் வடக்கு, கிழக்கில் உள்ளவர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன் என எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதை பாருங்கள் “நான் வடக்கு, கிழக்குக்கு வருவேன், நீங்கள் (வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள்) விகாரைகளை தடுக்க முற்பட்டால், மகா சங்கத்தினர்மீது கை வைக்க முயன்றால் நான் களனிக்கு சும்மா திரும்பி வரமாட்டேன், உங்களின் (வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள்) தலைகளை கையில் சுமந்து கொண்டுதான் களனிக்கு வருவேன்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த (13.08.2023) முற்பகல் 11.55 மணிக்கு ‘ஹிரு’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியில் மேர்வின் சில்வாவின் இந்த உரையும் ஒளிபரப்பட்டது. அவரின் முழு உரையாக அல்லாமல் அவர் ஆற்றிய உரையில் ஒரு பகுதியாகவே அது இருந்தது. இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாகவே மேர்வின் சில்வா வலம் வருகின்றார்.

ஊடக நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை, அரச ஊழியரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியமை, முன்னேஸ்வரம் ஆலயத்துக்குள் புகுந்து வேள்வி பூஜையை தடுத்து நிறுத்தியமை என அவரின் அடாவடி செயற்பாடுகளை பட்டியலிடலாம்.

ராஜபக்சக்களின் சகாவாக அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மேர்வின் சில்வா, 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் பொதுத்தேர்தலில் போட்டியிட எந்தவொரு கட்சியும் இடமளிக்கவில்லை.

இதனால் அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் தனது மகனுடன் இணைந்து மக்கள் சேவை எனும் கட்சியையும் ஆரம்பித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். பொதுத்தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் களமிறங்கினார். அதன்பின்னர் சுதந்திரக்கட்சி பக்கம் தாவினார். தற்போது எந்த கட்சி என தெளிவில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை அம்மையார் இலங்கை வந்திருந்தபோது, அவருக்கு திருமண அழைப்பு விடுத்து நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர்தான் இந்த மேர்வின் சில்வா. இறுதியில் அது மேர்வினின் தனிப்பட்ட கருத்து எனக்கூறி மகிந்த அரசுக்கு அப்போது மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போது வடக்கு கிழக்கு தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன் என வீரம் பேசிய மேவின் சில்வா ஒரு பயித்திய காறன் என்று கூறிவிட்டு இருக்கமுடியாது. இது ஒரு கொலைக்குற்றம் என்பதை புரிந்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆனால் வழமையாகவே இலங்கையில் இனப்படுகொலை செய்தவர்களுக்கே சட்ட நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படாத நாட்டில் மேவின் சில்வாவை தண்டிப்பார்கள் என எதிர்பார்க முடியாது. மேர்வினின் இந்த உரையை அவரின் கருத்த சுதந்திரம் எனக்கூறி நியாயப்படுத்திவிட முடியாது.

இது இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தாகவே அமைந்துள்ளது. எனவே, இந்த உரை தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா ஆகியோரின் உரைகள் எவ்வளவு பாரதூரமாக அமைந்ததோ அதற்கு ஒப்பான செயல்தான் இதுவும்.

எனவே, சட்டம் தன் கடமையை செய்யுமா அல்லது செய்யாதா என்பது ஒரு புறம் இருக்க இவ்வாறான கருத்துகள் 13, வது அரசியல் யாப்பு அமுலாக்க கதைக்களை இல்லாமல் செய்துள்ளது என்பதே பிச்சை எடுக்கும் இந்த நாடு கௌரவ பிச்சை எடுக்க உள்நாட்டில் போர் வேண்டும்.

உலகை ஏமாற்றி பணம் பறிக்க வேண்டும். அவ்வாறான இனவாத ஏற்பாடே இவ்வாறான குரோத கருத்துகள் இப்போது அதிகரித்துள்ளதா என்ற சந்தேகமும் உள்ளது.

விகாரைகளும், புத்தர் சிலைகளும் மலிந்த நாட்டில் இப்போது வடக்கு கிழக்கிலும் வரலாற்றை மாற்றும் விகாரைகளும் புத்தர் சிலைகளும் அதிகரித்துள்ளன.

இதை தடுக்க தமிழ் தேசிய தலைவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது காலத்தில் கட்டாயம்.