நாட்டில் உள்ள அப்பாவி பொதுமக்களை சுற்றுலா விசா ஊடாக வெளிநாடுகளுக்கு கடத்தி அவர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல அவர்களது குடும்பத்தினரது வாழ்வையும் சீரழிக்கும் நடவடிக்கையாக தற்போது சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் கடத்தல்காரர்களின் செயற்பாடுகள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
“இன்று ஒருவர் தனக்கு அழைப்பொன்றை மேற்கொண்டு, ரஷ்யாவிற்கு ஒருவர் சென்று அங்கிருந்து லித்துவேனியாவுக்கு செல்ல முற்பட்ட போது அவரது இரு கால்களும் வெட்டப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறே சமீப நாட்களாக ரஷ்யாவிலிருந்து லித்துவேனியாவுக்கு சென்ற 6 பேரின் கால்கள் வெட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு என்ன நடந்தது, தேடிப்பார்க்க முடியுமா, அவர்களது குடும்பங்களுக்கு இதை பற்றி அறியப்படுத்த முடியுமா, அதற்கான முறையான திட்டமிடல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் இல்லை.
இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்ப்பதற்கு முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
மேலும், “டுபாய் நகருக்கு சென்றால், அங்குள்ள நடைபாதைகளில், பூங்காக்களில், வீதியோரங்களில், பல்பொருள் அங்காடிகள் என ஆங்காங்கே இலங்கை மக்கள் நிர்க்கதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
காலியில் இருந்து டுபாய் சென்றிருந்த செனவிரத்ன சிங்கள மொழியில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது, 15 பேர் வரை அவரை சூழ்ந்துக்கொண்டு ஏதேனும் பணம் வழங்குமாறு கோரியுள்ளனர்.
இதுதான் உண்மையான நிலைமை. எனவே இது தொடரிபில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆராய்ந்து தீர்வொன்றை வழங்குமாறும்” இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
“வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு பொருத்தமான பயற்சியை இங்கு வழங்குவதோடு, வெளிநாடுகளுக்கான மனித கடத்தல்களை தடுத்து, அப்பாவி மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதோடு, எமது நாட்டின் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படாமல் பாதுகாக்குமாறும்” சந்திம வீரக்கொடி நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டார்.