வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையர்களுக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி.

சட்டரீதியாக நாட்டுக்கு பணம் அனுப்பும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்க அமைச்சரவையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பணம் அனுப்புவதற்கு சட்ட ரீதியான வழிகளைப் பயன்படுத்தும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றார்.

கட‌ந்த சில ஆ‌ண்டுகளாக வாகன இறக்குமதி அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், எவ்வாறாயினும், வெளிநாட்டு நாணயங்களை அனுப்புவதற்கு உத்தியோகபூர்வ வங்கி வழிகளைப் பயன்படுத்தும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றார்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களை சூரிய சக்தி மூலம் சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதேநேரம், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குறைந்த வட்டி வீடமைப்புக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

“கடந்த மாதம் 305 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது, அதை 500-600 மில்லியன் டாலர்களாக உயர்த்த முடிந்தால், எங்களின் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும்” என்று அமைச்சர் கூறினார்.

ஜப்பான் மற்றும் இஸ்ரேலுக்கு செல்லவிருக்கும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் குழுவை சந்தித்த போது அமைச்சர் மனுஷ நாணயக்கார இவற்றை குறிப்பிட்டிருந்தார்.