வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளுக்கு கட் அவுட்

த.வெ.க மாநாட்டு திடலில் நிறுவப்பட்டுள்ள வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் கட் அவுட்
காமராஜர், பெரியார், அம்பேத்கர் வரிசையில் வீர மங்கைகளாக திகழ்ந்தவர்களுக்கும் கட் அவுட்

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. விறுவிறுப்பான ஏற்பாடுகள், தமிழகம் முழுவதும் இருந்து திரளும் தொண்டர்கள் என தமிழக வெற்றிக்கழகம் அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறது.

இந்த அரசியல் மாநாட்டில் தான் விஜய் தனது கட்சியின் கொள்கை குறித்து பேச இருக்கிறார். தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீடுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் தான் விஜய் பேச இருக்கிறார். 2026-ம் ஆண்டு தனது அரசியல் பாதை என்ன? கூட்டணியா, தனித்தா? என்பது குறித்தெல்லாம் இந்த மாநாட்டில் தான் விஜய் தெளிவுபடுத்த இருக்கிறார்.

ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இன்றைக்கு விக்கிரவாண்டி நோக்கியே திரும்பி நிற்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் விஜய்யின் அரசியல் நடவடிக்கையை உற்று நோக்கியே வருகிறார்கள்.
மாநாட்டிற்கு நாளை ஒரு நாளே உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திடலில் தொண்டர்கள் அமர்வதற்கு 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. 4 பகுதியாக பிரிக்கப்பட்டு இந்த இருக்கைகள் போடப்பட்டுள்ளது.

மேலும்  த.வெ.க மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பவர்கள் நலனுக்காக கண்காணிப்பு கமரா, குடிநீர், கழிப்பிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. மாநாடு சிறப்பாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.