வைத்தியர் பற்றாக்குறை ; அவசர சிகிச்சைப் பிரிவு பாதிப்பு

வைத்தியர் பற்றாக்குறை காரணமாக இரத்தினபுரி பொது வைத்தியசாலை சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் இரத்தினபுரி மாவட்ட குழு உறுப்பினர் வைத்தியர் மகேந்திர பண்டார செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது விசேட வைத்தியர் எவரும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் தரவுகளுக்கமைய கடந்த ஒன்றரை வருடக் காலப்பகுதியில் 272 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதேநேரம் 514 ஏனைய வைத்தியர்களும் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலை தற்போது இரத்தினபுரி பொது வைத்தியசாலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வைத்தியசாலை மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என்பவற்றில் சேவையாற்றிய பல விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

விசேட வைத்தியர்கள் இன்மையால், அவசர சிகிச்சை பிரிவின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இரத்தினபுரி மாவட்டக் குழுவின் உறுப்பினர் வைத்தியர் மஹேந்திர பண்டார தெரிவித்துள்ளார்.