12 ரக துப்பாக்கி வைத்திருந்த நபரொருவர் நாவலப்பிட்டியில் கைது

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத் தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக துப்பாக்கி ஒன்றும், வெற்றுத்தோட்டாக்களும், மானின் தோலும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் இன்று (07) ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, சந்தேக நபர் மேற்படி துப்பாக்கியை எங்கிருந்து எடுத்து வந்தார்? என்ற கேள்விக்கு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.