130 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

கற்பிட்டி, குதிரைமலை பகுதியில் 434 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குதிரைமலை முனைக்கு மேற்கே சர்வதேச கடல் எல்லை பகுதியில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய நாட்டுப் படகு ஒன்றை சோதனை செய்த போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரும், கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் இந்திய படகு ஒன்றை நேற்றைய தினம்  சோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த படகில் 09 உரைப் பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 434 கிலோ எடையுள்ள கேரள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இராமஸ்வரத்தில் இருந்து குறித்த கேரளக் கஞ்சா இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என இலங்கை கடற்படை தெரிவித்தனர்.

மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்திய மீனவர்கள் ஐவரும், இலங்கை மீனவர்கள் ஐவருமாக 10 மீனவர்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இலங்கை டோலர் படகு ஒன்றும், அதில் இருந்து பெருமளவு வலைகளும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி சுமார் 130 மில்லியன் ரூபா என கடற்படை தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் இலங்கை மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் மற்றும் கேரள கஞ்சாவை பொதிகளையும்   மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.