14 வயது சிறுவன் மீது கத்தி குத்து தாக்குதல். ;  20 வயதுடைய இளைஞன் கைது.

காத்தான்குடி – கர்ப்பலா பிரதேசத்தில் 14 வயது சிறுவனின் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.

வீதியால் குறித்த 14 வயது சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது வீதியில் நின்றுகொண்டிருந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன் சிறுவனை பார்த்து ”என்னடா என்னை பார்க்கின்றாய்” என கேட்டு சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிறுவன் கத்தியதை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

கத்திகுத்து தாக்குதலை நடத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்த போது குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.