17 வயது கால்பந்து வீராங்கனை மரணம் : 2 மருத்துவர்கள் இடைநீக்கம்.

சென்னை 17 வயது கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சையளித்தாக வுறப்படும் இரண்டு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மரணமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தமது மகளின் மரணத்துக்கான மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது தந்தை ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மாணவிக்கு சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா

தமது மகளின் காலில் உள்ள  சவ்வு  தான் கிழிந்துள்ளது. என்று மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால் தம் மகள் உயிரிழப்பார் என்று தாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பிரியா மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளார்.

17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா

கடந்த ஓராண்டுக்கு முன்னர் அவரது வலது காலில் ஏற்பட்ட காயத்தால்  சவ்வு  பாதிப்பு ஏற்பட்டது. அதே பாதிப்பு மீண்டும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்டது.

இதற்கு சிகிச்சை பெற சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்த பின்னர்  கால் சவ்வு  விலகி இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், அவரை வீட்டுக்கு அருகிலேயே உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெறப் பரிந்துரை செய்துள்ளனர்.

கடந்த 7ஆம் திக தி பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் வலி குறையாததால், பிரியா 8ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு பிரியாவின் வலது கால் தசைகள் அழுகிய நிலையில் இருந்ததால் மருத்துவர்களால் கால் அகற்றப்பட்டது.

பெரியார் நகர் மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு காலில் போடப்பட்ட கட்டு மிகவும் இறுக்கமாக இருந்ததால் காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, ரத்த நாளங்கள் பழுதாகி மிகவும் அவதிக்கு உள்ளனார் என்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் தாம் பிரியாவை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வந்து பார்த்த போது அவர் நலமுடன் இருந்ததாகவும், நேற்று நள்ளிரவுக்கு மேல் பிரியாவுக்கு சிறுநீரகம், ஈரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இன்று காலை 7:15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு அமைத்த மருத்துவ வல்லுநர் குழு பெரியார் நகர் மருத்துவமனை மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அங்கிருந்த இரு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என்று கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பிரியாவின் உடலைப் பெற மறுத்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வந்த அவரது உறவினர்கள், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.