3 பெண்கள் தனித்து வாழும் வீட்டுக்கள்  புகுந்த  கொள்ளையர்கள் – நகை, பணம் கொள்ளை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில்  மூன்று பெண்கள் மாத்திரம் இருந்த பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ள நிலையில், குறித்த குடும்பம் செய்வதறியாது தவித்து வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் கணவனை இழந்துவிட்ட நிலையில், தனது மகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்து வருவதோடு தனது தாயாரையும் பராமரித்து வருகின்றார் சிறீபாலன் ஜுட் கிறிஸ்ரா.

இவ்வாறான பிண்ணனியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்துவரும் குறித்த வீட்டின் கூரையை பிரித்து நேற்று முன்தினம் (04) இரவு 11.00 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் குறித்த வீட்டில் இருந்த தாய், மகள், தாயின் தாய் ஆகிய மூவரின் கண்கள் கைகளை கட்டிவிட்டு வீட்டில் கொள்ளையிட்டுள்ளனர்.

மகளிர் சிறு சேமிப்பு குழுவின் தலைவியான குறித்த பெண்ணிடம் மக்கள் வழங்கிய பணம், பாடசாலை வகுப்பு தலைவியான மகள் பாடசாலை மாணவர்களிடம் பாடசாலையில் இடம்பெறவுள்ள நிகழ்வுக்கு சேமித்த பணம், வாழ்வாதாரத்துக்காக அவர்கள் நடாத்திவரும் சிறு கடையின் வியாபார பணம் என 90,000 ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையிடப்பட்டுள்ளது.

அத்தோடு மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி நகைகளை கோரி அவர்களிடம் இருந்த சுமார் ஆறு பவுனுக்கும் அதிகளவான நகைகளையும் கொள்ளையடித்து அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்

இரவு 11.00 மணியளவில் வீட்டில் நுழைந்த குறித்த கொள்ளையர்கள் அதிகாலை 3.00 மணிக்கு பின்னரே வீட்டை விட்டு சென்றதாகவும், தமது கடையில் இருந்த சிகரெட்களை எடுத்து வந்து தமக்கு முன்னால் புகைத்து கடையில் இருந்த சோடாவை எடுத்து குடித்து  தம்மை கெட்ட வார்த்தைகளால் பேசி பல்வேறு அட்டகாசம் புரிந்து சென்றதாகவும் குறித்த தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

முன்னைய காலத்தில் நாம் எந்த பயமும் இன்றி வாழ்ந்தோம் ஆனால் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எம்மை பொலிசுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் வழங்க கூடாது எனவும் அதை மீறி கூறினால் மூவரையும் வந்து கொலை செய்வோம் எனவும் மிரட்டி சென்றுள்ளனர் என அந்த தாய் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்