3-வது குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்

கோலிவுட்டின் இளவரசனாக கொண்டாடப்படுபவர் சிவகார்த்திகேயன். 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறினார். சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் முன்னரே திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய சொந்த மாமா பொண்ணான ஆர்த்தியைதான் சிவகார்த்திகேயன் திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் ஆராதனா. இவர் தன்னுடைய 5 வயதிலேயே சினிமாவில் பாடி இருக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்கிற பாடலை பாடியது ஆராதனா தான். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. தற்போது சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுக்கு 11 வயது ஆகிறது. அவர் பள்ளியில் படித்து வருகிறார்.

ஆராதனாவை தொடர்ந்து சிவகார்த்திகேயன் – ஆர்த்தி ஜோடிக்கு 2-வது ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 2021-ம் ஆண்டு பிறந்த அக்குழந்தைக்கு குகன் தாஸ் என பெயரிட்டுள்ளனர். அவரை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செல்லமாக குட்டி எஸ்.கே. என அழைத்து வருகின்றனர். தற்போது குகன் தாஸுக்கு மூன்று வயது ஆகிறது. சமீபத்தில் அயலான் பட ஆடியோ லாஞ்சில் குகன் தாஸ் மேடையில் பேசியது மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் விரைவில் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி ஜோடிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ள தகவல் வெளியானது. சமீபத்தில் ரசிகர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்டபோது எடுத்த வீடியோ வெளியானது.அந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அப்போது ஆர்த்தி கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் 3வது குழந்தைக்கு தந்தையாகும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்தநிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆர்த்திக்கு நேற்று இரவு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை சிவகார்த்திகேயன் தற்போது அதிகார பூர்வமாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது,

அனைவருக்கும் வணக்கம் எங்களுக்கு நேற்று இரவு, ஜூன் 2 ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிக்கும், குகனுக்கும், நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம். நன்றி அன்புடன் சிவகார்த்திகேயன் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு விருந்தளித்தார். 

அமரன் படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் #எஸ்.கே 23 படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகளும் நடைப்பெற்று வருகிறது.