கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய லைக்கா ஜெப்னா கிங்ஸ், 2022 எல் பி எல் சம்பியனானது.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற ஜெப்னா கிங்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தனர்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அதனடிப்படையில் ஜெப்னா கிங்ஸ் அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன் மூலம் இலங்கையில் விளையாடப்பட்ட முதல் 3 எல் பி எல் அத்தியாயங்களிலும் ஜெப்னா கிங்ஸ் சம்பியனாகி வரலாறு படைத்தது.

இந்த வெற்றியுடன் 3 கோடியே 60 இலட்சம் ரூபா பணப்பரிசை ஜெப்னா கிங்ஸ் தனதாக்கிக் கொண்டது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பணப்பரிசு கிடைத்தது.
இந்த வருட எல் பி எல் போட்டியில் முன்னேறி வரும் அதி சிறந்த வீரருக்கான விருது யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித்தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு வழங்கப்பட்டது.
