பெந்தோட்டை – கஹகல்ல – வடுமுல்ல பிரதேசத்தில், நோயிலிருந்து குணமாக்குவதாக கூறி மூன்றரை வயது சிறுமியை ஊசியால் குத்தி சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் பேயோட்டி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெந்தோட்டை – வடுமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு இந்த சிறுமியை அவரது தாயார் மற்றும் அத்தை அழைத்து சென்றுள்ளதாகவும், சிறுமியின் தந்தைக்கும் இந்த பேயோட்டி அறிமுகமானவர் எனவும் தெரியவந்துள்ளது
சிறுமியின் உடலில் உள்ள நோயை குணப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதன் பேரில், சந்தேகநபரான பேயோட்டி சிறுமியின் பெற்றோரிடம் மூன்று தடவைகளில் இரண்டு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் உடலுக்குள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நோய் இருப்பதால், கடவுளின் கட்டளைப்படி அதனை குணப்படுத்த முடியும் என்று கூறி, சிறுமியின் உடலில் இருந்து இரத்தம் வரும் வரை ஊசியால் குத்தி சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன் பின்னர் சிறுமியின் தந்தையினால் அளுத்கம காவல்நிலையத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபரான பேயோட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.