46 அகதிகளின் சடலங்களுடன் கன்டெய்னர் – அதிர்ச்சி சம்பவம்

At least 46 bodies found in 18-wheeler in San Antonio
At least 46 bodies found in 18-wheeler in San Antonio

அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று மாலை போலீஸாரால், கன்டெய்னரிலிருந்து 46 அகதிகள், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியாவில் ரயில்வே ட்ராக்குகளுக்கு அருகிலுள்ள பகுதியில், நேற்று மாலை 6 மணியளவில் கன்டெய்னரில் அகதிகள் சடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து அவசர அழைப்பு வந்ததையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீஸார் 46 அகதிகளை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் இதில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 16 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய தீயணைப்பு படை தலைவர் சார்லஸ் ஹூட், “மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர்களில் 12 பேர் பெரியவர்கள், 4 பேர் குழந்தைகள்” என்று கூறினார். மேலும், அவர்களின் உடல் மிகவும் சூடாக இருந்ததாகவும், கன்டெய்னரில் தண்ணீர் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார்.

சான் அன்டோனியோவில் வெப்பநிலையானது நேற்று அதிக ஈரப்பதத்துடன் 39.4 டிகிரி செல்சியஸ் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் அதிக எண்ணிக்கையிலான அகதிகள் பலரும் கடந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது, அதிபர் ஜோ பைடனின் குடியேற்றக் கொள்கைகள் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் டெக்சாஸ் மாகாணத்தின் ஆளுநராக கிரெக் அபோட், “இது அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் மனித கடத்தலின் மிக மோசமான சம்பவங்களில் ஒன்று. அகதிகள் சட்டத்தை அமல்படுத்த மறுத்ததன் கொடிய விளைவுகளையே இவை காட்டுகின்றன” எனக் கூறியிருந்தார்.