போலியான அடையாளத்தை வெளிப்படுத்தி திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து இலங்கை பெண்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த நைஜீரிய பிரஜை கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சமூக வலைத்தளங்களில் தான் ஐரோப்பாவில் வசிக்கும் மருத்துவர், பொறியியலாளர் எனக் கூறி முகநூல் ஊடாக இலங்கை பெண்களுடன் அறிமுகமாகி அவர்களை திருமணம் செய்துக்கொள்ளவதாக வாக்குறுதி வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர், பரிசு பொருட்களை அனுப்புவதாக கூறி, சுங்க திணைக்களத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள பணம் தேவை தெரிவித்து பெண்களை ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு ஏமாற்றப்பட்ட பெண்ணொருவர் வைப்புச் செய்த பணத்தை மகரகமையில் உள்ள பணம் மீளப்பெறும் இயந்திரத்தில்( ATM) இருந்து எடுக்க சென்றிருந்த போதே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப் பிரிவினர், இப்படியான நிதி மோசடி சம்பந்தமான மேலும் சில நைஜீரிய பிரஜைகளை கைது செய்வதற்காக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.