கொழும்பு வாழ் இளைஞர்கள் மத்தியில் அபாயகரமான இரசாயன பாலுறவு (Chemsex) அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டி ஆரச்சி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுடனான கலந்துரையாடலொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, எச்ஐவி தொற்றாளர் அதிகரிப்பு என்பவற்றுக்கு மத்தியில் தற்போது இரசாயன பாலுறவு என்ற புது அச்சுறுத்தலுக்கு இளைஞர்கள் உள்ளாகியுள்ளனர்.
மதுபானம் மற்றும் சில போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், கெமிக்கல் செக்ஸ் என அறியப்படும் இரசாயன பாலுறவு (Chemical sex அல்லது Chemsex) தற்போது இலங்கையிலும் பிரபலமாகி, பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் அபாயத்தை உயர்த்தியுள்ளது.
பாலியல் அனுபவத்தை எளிதாக்க, நீடிக்க அல்லது தீவிரப்படுத்தமுக்கியமாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் சில ஆண்கள், பாலியல் செயல்பாடுகளுக்கு முன்னதாக அல்லது செயற்பாடுகளின் போது சில இரசாயன போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதை இரசாயன பாலுறவு என்று வரையறுக்க முடியும்.
இதற்கு முன்னர் இவ்வாறான ஆபத்தான பாலுறவு நடைமுறையில் இருந்த போதிலும், தற்போது அது அதிகரித்துள்ளதாகவும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இந்த நிலைமை அதிகளவில் காணப்படுவதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பல இளைஞர் குழுக்கள் இவ்வாறான பாலியல் நடத்தைகளில் ஈடுபடுவதாக வைத்தியர் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
போதைக்கு மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போன்ற மருந்துகளை பயன்படுத்தும் குழுக்கள் அதன் ஆபத்துகளை அறியாமல் இத்தகைய பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர்.
மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), மெபெட்ரோன் மற்றும் கெட்டமைன் போன்ற நான்கு பொருட்கள் பொதுவாக இரசாயன பாலுறவுடன் தொடர்புடையவையாகும்.
போதைப்பொருள் விற்பனையாளர்களிடையே எளிதாக ஐஸ் கிடைப்பதால், இத்தகைய பாலியல் நடத்தையில் ஈடுபடும் இளைஞர்களிடையே அதன் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் போதைப்பொருள் உட்கொண்ட பின்னர் உடலுறவு கொள்ளும் குழுக்கள் உள்ளன. எனவே கொழும்பில் இரசாயன பாலியல் உறவுகள் பரவுவது அதிகரித்துள்ளதாக வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி கூறினார்.
நாட்டில் தற்போது எச்ஐசி தொற்றாளர் அதிகரித்து வருகின்றமைக்கு இத்தகைய பாலியல் கலாசாரமும் ஒரு முக்கிய காரணம் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
இளைஞர்களிடையே கோனோரியா மற்றும் சிபிலிஸ் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்புகள் தெரிவிக்கின்றன.
தம்மிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தாம் எவ்வாறு இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டனர் என்பதை பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை என வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.