ராஜபக்சவை கனடா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் நிராகரிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர்கள் தொடர்பாக ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று (12) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி நாட்டு மக்களையெல்லாம் பஞ்சத்துக்கு உள்ளாக்கி இன்று நாட்டு மக்கள் பல சொல்லெண்ணாத துன்பங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற வேளையிலே இந்த அரசாங்கம் அவ்வாறான மோசமான நிலைகளை சேர்ந்தவர்களோடு சேர்ந்து கொண்டு ஜனநாயக ரீதியாக நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலை கூட பிற்போடுவதற்கான சில சதிகளை முன்னெடுத்து வருவதை நாங்கள் கண்டிக்கிறோம்.
இந்த தேர்தல் ஜனநாயக ரீதியாக உரிய நேரத்திலே நடத்துவதன் ஊடாக துன்பத்திலும், கஷ்டத்திலும் இருக்கின்ற மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு இது காரணமாக அமையும். அதை விட்டுவிட்டு குறுக்கு வழியினால் இந்த தேர்தலை நிறுத்தி ஜனநாயக தேர்தலுக்கு எதிராக செயற்படுவது என்பது ஒரு பிழையான நடவடிக்கை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று பல கட்சிகள் தற்போது தேர்தலுக்கு தயாராக இருக்கின்ற போது இந்த நாட்டை குட்டிச்சுவராக்கிய கட்சி தான் தேர்தலுக்கு தயார் இல்லை என்ற காரணத்தினால் இந்த தேர்தலை பிற்போடுவதற்கான பாரிய சதிகளை ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு கோணத்திலும், முன்னெடுத்து வருகிறது. எனவே நாங்கள் எதிர் பார்க்கிறோம் தேர்தல் ஆணைக்குழு மிக நேர்மையாக, நியாயமாக செயற்படுவதன் ஊடாக நிச்சயமாக இந்த தேர்தலை உரிய நேரத்திலே நடத்தி முடிக்கலாம் என நம்புகின்றோம்.
பயங்கரவாத சட்டம் இந்த நாட்டிலே உருவாக்கப்பட்டதன் நோக்கம் மாறி அரசியல் நோக்கங்களுக்காக, சுயநலன்களுக்காக, தங்களை விருப்பம் இல்லாதவர்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அந்த சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதிலே நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாட்டுக்கு தேவையான சட்டங்களை வகுக்கின்ற போது நாட்டுடைய நலனை மையமாக வைத்து அது உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கூறியிருக்கிறோம்.
எனவே அண்மை காலமாக சாதாரண பல்கலைக்கழக மாணவர்களை, ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கின்றவர்களை, உண்மையை பேசுகின்றவர்களை, அச்சுறுத்துவதற்காக, பயமுறுத்துவதற்காக, சிறைப்படுத்துவதற்கு வேறு காரணங்கள் இல்லாத காரணத்தினால் இந்த பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அதற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றுபட்டு அதனை எதிர்க்க வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ராஜபக்ச மன்னிக்கப்பட முடியாத ஒருவர். தான் ஜனாதிபதியாக இருந்த குறுகிய காலத்துக்குள்ளே நாட்டிலே இனவாத, மதவாத பிரச்சாரங்களை எழுப்பி அதனூடாக இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி இந்த நாட்டோடு சர்வதேச நாடுகளுக்கு இருந்த நட்பை நாசமாக்கிய ஒருவர்.
அது மாத்திரம் அல்லாமல் நாட்டிலே இருக்கின்ற எல்லா இனங்களும் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்த இனங்களை மத ரீதியாக பிரித்து செயற்படுவதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவ்வளவு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து அழகான, வளமான இந்த நாட்டை பொருளாதார ரீதியாக என்றுமே இல்லாத அளவு ஒரு மோசமான நிலைக்கு கொண்டு வந்தவர்.
எனவே அவருக்குரிய தண்டனையை இந்த நாட்டிலே வழங்க வேண்டும். அவரை கனடா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் நிராகரித்து அவருக்கு வீசா வழங்குவதை நிராகரிப்பதனூடாக இந்த நாட்டிலே அவர் இருந்து எங்களுடைய, இன்னும் ஒரு ஆட்சி வருகின்ற போது அவர் செய்த இந்த மாபெரும் தவறுகளுக்காக இந்த நாட்டு மக்களை பஞ்சத்திலே தள்ளியமைக்காக சட்ட நடவடிக்கையின் ஊடாக உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம் என மேலும் தெரிவித்தார்.