கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ- 9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூன்று பேரை பொலிஸார் வியாழக்கிழமை (13) இரவு கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவை சேர்ந்த 3 பேர், இந்த நாணயத்தாளை, இலங்கை ரூபாவாக மாற்றுவது தொடர்பில் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்றின் முகாமையாளரை சந்தித்து பேசுவதற்காக சென்று கொண்டிருந்த போது, கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான நாணயத்தாள், அதனுடன் தொடர்புடைய இரண்டு ஆவணங்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன.
செப்பு வடிவத்திலான மற்றைய இரண்டு ஆவணங்களை வைத்திருந்தாலே அந்த நாணயத்தாளை மாற்ற முடியும் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
முல்லைத்தீவை சேர்ந்த பிறிதொரு நபர் இந்த நாணயத்தாளை தம்மிடம் தந்து, பணத்தை மாற்றும்படியும், அதன் பின் பணத்தை பிரித்து எடுத்துக் கொள்ளலாமென கூறியதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.
தனியார் வங்கி முகாமையாளரை அவர்கள் தொடர்பு கொண்டு, காசோலையை மாற்றுவது பற்றி பேசியதாகவும், கொண்டு வருமாறும், பார்த்து சொல்வதாக குறிப்பிட்டதாகவும் வங்கி முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களில் இந்த வகை நாணத்தாள்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக முந்தைய காலங்களில் பேச்சுக்கள் அடிபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நாணயத்தாளை எவ்வாறு பெற்றார்கள் என்பது பற்றி பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.