சிறுமிகள் துஷ்பிரயோகம் : 15 பேருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை

தமிழ் நாட்டின், திண்டிவனம் எனும் பகுதியில் 2019 ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக, சிறுமிகளின் தாய்மாமா, தாத்தா உள்ளிட்ட 15 பேருக்கு, 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து, அவர்களது தயார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்திய போது அந்தச் சிறுமிகளுக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ள நிலையில், அவர்கள் திண்டிவனம் அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதன்போது, சிகிச்சை பலனின்றி 9 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்ததையடுத்து, பொலிஸார் தொடர்ச்சியாக வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வந்தனர்.

சிறுமிகளின் தயார் வேலைக்கு செல்கின்றமையால், பாட்டியின் பாராமரிப்பிலேயே இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சிறுமிகளுக்கு இனிப்புப் பண்டங்களை வாங்கிக்கொடுத்து அவர்களை ஏமாற்றி, அவர்களின் தாய்மாமா, தாத்தா மற்றும் உறவினர்களான 15 பேர் இவ்வாறு தொடர்ச்சியாக பாலியல் துஸ்ப்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்ந்து 5 மாதங்களுக்கு மேலாக குறித்த சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய்மாமா, தாத்தா உள்ளிட்ட 15 பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்த பொலிஸார், அவர்களைக் கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தநிலையிலேயே தற்போது தீர்ப்பு வெளியிடப்பட்டது.

அதற்கிணங்க, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டதோடு, ஒவ்வொருவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 32 ஆயிரம் இந்திய ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 பேரால் 2 சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு இலக்கான இந்த சம்பவம் தற்போது தமிழ் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.