அங்காடியில் கத்திக்குத்து ; மூவர் பலி, 15 பேர் காயம்!

சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில்  இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 15 பேர் காயமடைந்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக 37 வயதுடைய நபர் ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தாக்குதல்தாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பொதுப் பயன்பாட்டுக்கு துப்பாக்கிகள் தடைசெய்யப்பட்டுள்ளன, ஆனால் கடந்த சில மாதங்களாக நாட்டில் கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக கடந்த மாதம், 10 வயது ஜப்பானிய மாணவர் ஒருவர் தெற்கு சீனாவில் உள்ள தனது பாடசாலைக்கு அருகில் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம், வடகிழக்கு நகரமான ஜிலினில் உள்ள ஒரு பொது பூங்காவில் நான்கு அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் கத்தி குத்துத் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

அதுமட்டுமல்லாது கடந்த  மே மாதம், தெற்கு மாகாணமான யுனானில் உள்ள வைத்தியசாலையில் ஒரு நபர் நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் இருவர் உயிரிழந்திருந்ததோடு 21 பேர் காயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.