இந்தியாவில் முதல்முறையாக கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது.
இந்நிலையில், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த நபர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கடந்த 12ஆம் திகதி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்துசேர்ந்தவர் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அனைத்து உடல் உறுப்புகளும் இயல்பாக இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
அவருடன் முதன்மை தொடர்பில் இருந்தவர்களான தந்தை, தாய், கார் ஓட்டுநர்கள், விமானத்தில் உடன் பயணித்த 11 பேர் ஆகியோர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வீனா ஜார்ஜ் கூறினார்.
இந்நிலையில், கேரள அரசுக்கு உதவுவதற்காக உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இந்தக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து, மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.