ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மேலும் இருவர் இலங்கையில் கைது!

இந்தியாவின் குஜராத்தில் கைது செய்யப்பட்ட ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்களுடன் தொடர்புடைய மேலும் 2 பேர் சிலாபம் – பங்கதெனிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால், குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களும், சகோதரர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்களையும், இலங்கையிலிருந்து ஒஸ்மன் ஜெராட் என்பவரே வழி நடத்தியுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்பான தகவல்களை வழங்கும் நபருக்கு 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒஸ்மன் ஜெராட் எனும் நபர் தமது தோற்றத்தை அடிக்கடி மாற்றியிருக்கலாம் எனவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

46 வயதான குறித்த சந்தேகநபர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்திருப்பின், காவல்துறையின் 071 859 17 53 அல்லது 071 859 17 74 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் திகதி ISIS உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த 4 இலங்கையர்களும் அஹமதாபாத்தின் குஜராத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதானவர்கள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களில் ஒரு சந்தேக நபரான மொஹமட் நுஸ்ரத் சிங்கப்பூர், மலேசியா, டுபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தொலைபேசி உபகரணங்கள் மற்றும் மின்சார சாதனங்களை இறக்குமதி செய்து கொழும்பில் விற்பனை செய்த ஒருவர் என தெரியவந்துள்ளது.

கொழும்பில் தங்கியிருந்த நுஸ்ரத் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதேநேரம் மொஹமட் நப்ரான் இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான பொட்ட நௌப்ரின் மகனாவார்.

அவர் 16 வயதிலிருந்து இந்தியா, டுபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவதுடன், தமது தாயாருடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவர், 2017ஆம் ஆண்டு இரத்தினம் மற்றும் ஆபரணக் குற்றச்சாட்டுகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள ஏனைய 2 உறுப்பினர்களான மொஹமட் பாரிஸ் மற்றும் மொஹம்மட் ரஸ்டீன் ஆகியோர் இந்தியாவிற்கு முதன் முறையாக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொஹமட் பாரிஸ் புறக்கோட்டையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றியுள்ளதுடன், கடந்த வருடம் மார்ச் மாதம் 11ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

முச்சக்கர வண்டி சாரதியான மொஹம்மட் ரஸ்டின், ஐஸ் ரக போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி கொழும்பு கரையோரக் காவல்துறையினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 21ஆம் திகதி அவரது நண்பரான ஹமீட் அமீர் என்பவரை கொழும்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர்.

குறித்த நபருடன் தொடர்புடைய இருவருரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களின் வீட்டிற்கு ஹமிட் ஹமீர் அடிக்கடி வந்து சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.