isis ; கைதான 5 பேரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் இலங்கையின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) அனுமதி பெற்றுள்ளது.

இந்த சந்தேக நபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் இருந்து அவர்களின் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது.

மாவனல்லையைச் சேர்ந்த இருவர், மாளிகாவத்தையைச் சேர்ந்த இருவர் மற்றும் சிலாபம் பங்கதெனியவைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது காணாமல் போயுள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்ற பிரதான சந்தேகநபர் தொடர்பிலும் TID விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மே 19 அன்று அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இந்தியாவின் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுக்கு சந்தேகநபர்கள் உதவியும் நிதியுதவியும் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு பெரியமுல்லையைச் சேர்ந்த மொஹமட் நுஷ்ரத், எம்.ஜே.எம்.லத்தீப் மாவத்தையைச் சேர்ந்த மொஹமட் நஃப்ரான், ஒருகொடவத்தை நவகம்புரத்தைச் சேர்ந்த மொஹமட் ரஷ்டீன் மற்றும் மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த மொஹமட் பாரிஸ் ஆகிய நால்வர் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் மாளிகாவத்தையில் கலந்துரையாடலுக்காக கூடியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அஹமதாபாத் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு நான்கு இலங்கையர்கள் திட்டமிட்டிருந்ததாக குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.