வவுனியாவில் பெண்ணை கடத்தி கப்பம் கேட்ட 4 பேர் கைது

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறுவதற்காக சிறைபிடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடத்தல் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (13) காலை வாரியகுத்தூர் பகுதியில் வைத்து குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட பெண்ணை கப்பம் கோரி வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் கடத்தப்பட்ட பெண்ணின் மகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை விடுவிக்க 500,000 ரூபா கப்பம் கோரியுள்ளனர்.

கப்பம் கொடுக்காவிட்டால் குறித்த பெண்ணை சுட்டுக் கொன்று விடுவோம் என சந்தேக நபர்கள் மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பெண்ணின் மகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து பணம் கொடுக்கும் விதத்தில் சந்தேகநபர்கள் அழைக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட பெண்ணும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 49 வயதுடைய வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் இன்று (14) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.