205 இந்தியர்களை  நாடு கடத்தியது அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற சில நாட்களில் சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றநடவடிக்கைகளில் தொடர்புடையவர்களை சிறைப்படுத்தியது.

பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை கைவிலங்கிட்டு அமெரிக்க ராணுவ விமானம் மூலம் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பியது.

இதில் கொலம்பியா தனது நாட்டு குடிமக்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்று கூறி அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அனுமதி மறுத்ததோடு தங்கள் நாட்டு பயணிகள் விமானத்தை அனுப்பி அவர்களை அழைத்துச் செல்வதாகக் கூறி அமெரிக்காவை உசுப்பேற்றியது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவும் பயணிகள் விமானம் மூலம் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை அழைத்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கவுதிமாலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டுக்கு அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.

அதேபோல் இந்தியர்களையும் தனது நாட்டு ராணுவ விமானத்தில் ஏற்றி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

இந்த விமானம் நேற்றிரவு அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட நிலையில் இன்று இரவு இந்தியா வந்து இறங்கியதும் இதில் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.