இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்தில் நிறைவேற்று சபை இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி அளித்துள்ளது.
எனவே, இலங்கை இனியும் உலகில் வங்குரோத்தடைந்த நாடாக கருதப்படமாட்டாது.
இலங்கையின் கடனை மறுசீரமைத்து வழமையான கொடுக்கல் வாங்கல்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் அங்கீகாரமாக இது அமையும்.
அந்நிய செலாவணி அதிகரிப்புக்கேற்ப, இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படும்.
இதன்முதற்கட்டமாக அத்தியாவசிய பொருள், மருந்துப் பொருட்கள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன தொடர்பில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெறுவதற்காக ஒத்துழைத்த, அனைத்து நாடுகளுக்கும், நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதானிகளுக்கும் ஜனாதிபதி தனதுரையில் நன்றி தெரிவித்தார்.