டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க்கின் தொழில்நுட்ப ஆலோசகராக தமிழர் ஒருவர் செயல்பட்டு வருகிறார்.
இந்திய அமெரிக்கரும், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனே இவ்வாறு தொழில்நுட்ப ஆலோசகராக செயல்பட்டு வருகிறார் என தெரியவருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீராம் கிருஷ்ணன், எலான் மஸ்கின் தலைமையில் டுவிட்டர் நிறுவனம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.
ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் என்ற நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் ஸ்ரீராம் கிருஷ்ணன், தற்காலிகமாகவே எலான் மஸ்குக்கு ஆலோசனை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எஸ் ஆர் எம் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஸ்ரீராம் கிருஷ்ணன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார்.
அதன்பிறகு பல்வேறு புத்தாக்க நிறுவனங்களின் ஆலோசகராக அவர் செயல்பட்டுள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை வழங்கும் விவகாரம் தொடா்பான டுவிட்டர் குழுவின் ஆலோசகராகவும் ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏற்கனவே செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.