கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 101ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (29) ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே போட்டி சாதனையை நிலைநாட்டினார்.
400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.07 செக்கன்களில் நிறைவு செய்தே காலிங்க குமாரகே போட்டி சாதனையை நிலைநாட்டினார். இது அவரது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாகும்.
அப்போட்டியை 45.45 செக்கன்களில் நிறைவுசெய்த அருண தர்ஷனவும் தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியைப் பதிவுசெய்தார்.
பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.89 செக்கன்களில் நிறைவுசெய்த கேகாலை மாவட்ட மெய்வல்லுநர் சங்க வீராங்கனை ருமேஷிகா ரத்நாயக்க வெற்றிபெற்றார். இவர் சில கால இடைவெளிக்குப் பின்னர் இப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சிறந்தவரான அமாஷா டி சில்வா வெளிநாட்டில் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கல்வியுடன் பயிற்சிபெற்றுவருவதால் தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றவில்லை.
பெண்களுக்கான முப்பாய்ச்சலில் சுயாதீனமாக போட்டியிட்ட விதுஷா லக்ஷானி 13.43 மீற்றர் தூரம் பாய்ந்து வெற்றிபெற்றார்.
பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனைகளான சோனியா பய்ஷியா (53.46 செக்), ஜிஸ்னா மெத்யூ (53.75 செக்.) ஆகிய இருவரும் முறையே முதலிரு இடங்களைப் பெற்றனர்.
பெண்களுக்கான 300 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியை 10 நிமிடங்கள் 13.06 செக்கன்களில் நிறைவுசெய்த இந்தியாவின் ப்ரிதி முதல் இடத்தைப் பெற்றார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை போட்டியின் கடைசி நாளாகும்.
இன்றைய தினம் ஆண்கள், பெண்கள் மற்றும் கலவை பிரிவினருககான 4 x 400 மிற்றர் தொடர் ஓட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியா மற்றும் மாலைதீவு அணியினரும் தொடர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.