நெடுந்தீவுக் கடலில் கைதான 2 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு

யாழ். நெடுந்தீவுக் கடலில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டவேளை விபத்தின்போது கைதான இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் வழக்கு நடவடிக்கைகள் ஏதும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டிய இந்தியப் படகை இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடிக்க முயன்றபோது கடற்படையினரின் படகு மோதியதில் தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் காணாமல்போன சம்பவத்தில் குறித்த இரு கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட இரு கடற்றொழிலாளர்கள் நேற்று ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இன்றி இன்று விடுவிக்கப்பட்ட அதேநேரம் உயிரிழந்த கடற்றொழிலாளரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் உடற்கூற்றுப் பரிசோதனை இன்று இடம்பெறும் என்று வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைகள் இன்று முடிவுற்று நாளை சடலத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்போது உயிருடன் பிடிக்கப்பட்ட இரு கடற்றொழிலாளர்களையும் அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக  தெரிவிக்கப்படுகிறது.